அரன் பணி அறக்கட்டளை என்ற திருப்பணி அமைப்பு திருவருளின் கருணையினால் 2021 -ல் தொடங்கப்பட்டது.

அரன்பனியின் நோக்கம்

கண்ணுக்கு முன்னே நிற்கின்ற ஆயிரம் ஆண்டுகள் பழமையான பக்தியின் வெளிப்பாடாகவும் பண்பாட்டின் அடையாளமாகவும் விளங்குகின்ற திருக்கோயிலை பாதுகாத்து, வருகின்ற தலைமுறையினருக்கு கொடுப்பதே அரன்பணி அறக்கட்டளையின் நோக்கம்.

மாதம் 100 ரூபாய் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி , அதன் வாயிலாக மூன்று வகையான திட்டத்தின் அடிப்படையில் திருகோயில் திருப்பணிகளை திருவருளின் கருணையினால் செம்மையாக செய்து வருகின்றது.

திட்டம் 1:

வெட்ட வெளியில் இருக்கக்கூடிய சிவலிங்க திருமேனிக்கு மேடை அமைத்து, அதற்கு மேற்கூரை அமைத்து தருதல்.

திட்டம் 2:

ஏற்கனவே கூரையில் உள்ள சிவலிங்கத் திருமேனிக்கு கருவறை, அர்த்த மண்டபம் மற்றும் ஒரு நிலை விமானம் அமைத்து தருதல்.

திட்டம் 3:

சிதிலமடைந்த பழமையான திருக்கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்து தருதல்.

பிற பணிகள்:

திருக்கோயில்களில் மின்சாதனங்கள் வாங்கித்தருதல், வண்ணம் பூசுதல், சுற்றுச்சுவர் அமைத்தல், கீழ்த்தளம் அமைத்தல் என்ற வகையிலும் திருப்பணிகள் செய்யப்படுகிறது.

2021 முதல் 2025: இன்றைய நாள்வரை அரன் பணி அறக்கட்டளை திருவருளின் கருணையினால் செய்த திருப்பணிகள் :

திட்டம் 1:

251 -ற்கு மேற்பட்ட சிவலிங்க திருமேனிக்கு மேடையும், மேற்கூரையும் அமைத்து தரப்பட்டது.

திட்டம் 2:

21 -ற்கு மேற்பட்ட கூரையின்கீழ் உள்ள சிவலிங்க திருமேனிக்கு கருவறை, அர்த்த மண்டபம், ஒரு நிலை விமானம் அமைத்து தரப்பட்டுள்ளது. மேலும் சில கோயில்களில் குடமுழுக்கு விழாவும் ஏற்று நடத்திக் கொடுக்கப்படுள்ளது,

திட்டம் 3:

33-ற்கு மேற்பட்ட சிதிலமடைந்த பழமையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்து தரப்படுள்ளது. இப்பணியை தவிர திருக்கோயில்களில் மின்சாதனங்கள் வாங்கி தருதல் மற்றும் வண்ணம் பூசுதல், சுற்று சுவர் அமைத்து தருதல், கீழ் தளம் அமைதல் என்ற வகையில் 66-ற்கு மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.

அரன்பணி அறக்கட்டளையின் சிறப்புப்பணிகள்:

  • அரன்பணி அறக்கட்டளைக்கு மணிமகுடமாக விளங்குவது திருஉத்திரகோசமங்கை திருக்கோயிலில் செயப்பட்ட திருப்பணிகள் சான்றாக விளங்குகிறது.

  • தற்போதைய நிலையில் பணியில் உள்ள ஓதுவார் மூர்த்திகளுக்கு ஊதியத்தொகையும், வயது முதிர்ந்த ஓதுவார் மூர்த்திகளுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

  • எல்லா இல்லங்களிலும் திருமுறை புத்தகம் சென்று சேர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மலிவு விலையில் திருவாசகம் மற்றும் சுந்தரர் தேவார புத்தகமும் வழங்கப்பட்டு வருகிறது.

திருஞானசம்பந்தருக்கு - திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசு சாமிகளும் சந்தித்து ஒருவரை ஒருவர் விழுந்து வணங்கிய இடமான சம்பந்தர் மேட்டில் முழுமையான கற்கோவில் கட்டப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசருக்கு - அப்பர் சாமிகளை சமணர்கள் கல்லைக்கட்டி கடலில் போட்ட நிலையில் ஐந்து எழுத்தை கூறி கரையேறிய இடமான கரையேறவிட்ட குப்பத்தில் உள்ள குளத்தை சரிசெய்தும் அப்பர் சாமிகளுக்கு முழுமையான கற்கோவில் கட்டப்பட்டுள்ளது

சுந்தரருக்கு - திருநாவலூரில் சுந்தரரின் அருள் வரலாற்றை பறை சாற்றும் வண்ணமாக சுற்றுசுவரில் புடைசிற்பங்களுடன் கூடிய திருக்காட்சிகளை அமைத்து சுந்தரருக்கு முழுமையான கற்கோவில் கட்டப்பட்டுள்ளது.

மாணிக்கவாசகருக்கு - மாணிக்கவாசகர் அவதாரம் செய்த திருத்தலமான திருவாதவூரில் திருவாசகம் பாடுகின்ற அரங்கம் கட்டப்பட்டு 365 நாட்களும் அடியார் பெருமக்கள் திருவாசகம் பாடுகின்ற வாய்ப்பையும் 365 நாட்களும் திருவாசகம் பாடுகின்ற அடியார் பெருமக்களுக்கு திருவமுது அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வருகின்ற அடியார் பெருமக்களுக்கு தாங்கும் இடத்தையும் அமைத்து தரப்பட்டுள்ளது.

அரன்பணி திட்டத்தின் வளர்ச்சி நிலைகள் :

2021 ஆம் ஆண்டு அரன்பணி திட்டத்தில் 6400 அன்பர்கள் முதன் முதலாக இணைந்திருந்தனர். 2025 இன்றைய நிலையில் அரன்பணியில் 25000க்கும் மேற்பட்ட அன்பர்கள் இணைந்துள்ளார்கள்.

தமிழ் இனத்தின் அடையாளமாகவும், நமது செல்வமான திருக்கோவில்களைப் பாதுகாத்து தருவதே நம் கடன் என்ற உயர்ந்த நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற திருநாவுக்கரசு சாமிகளின் அருள்வாக்கை அடியொற்றி திருக்கோயில் திருப்பணிகளை செய்து வருகிறது.

“இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ ஏதுவருமோ அறிகிலேன்” என்ற தாயுமான சாமிகளின் அருள்வாக்கின் படி இப்பிறவியிலேயே சிவபெருமானின் திருக்கோயில்களை பாதுகாத்து திருப்பணிகள் செய்வதே இப்பிறவியின் பயன் என்ற உயர்ந்த நோக்கத்தில் அரன்பணி அறக்கட்டளை திருவருளின் பெரும் கருணையினால் செயல்பட்டு வருகிறது.